மக்களின் நீண்ட கால தேவையொன்றினை நிறைவேற்றும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட நெலுவ – லங்காகம வீதி நிர்மாணப் பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளன.
கடந்த ஆகஸ்ட் 29ஆம் திகதி லங்காமவுக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் வீதியின் தற்போதைய நிலைமை பற்றி கேட்டறிந்து சுற்றாடலுக்கு பாதிப்பின்றி 90 நாட்களுக்குள் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்யுமாறு பணிப்புரை விடுத்தார்.
இராணுவத்தின் பொறியியல் பிரிவு, தேசிய கட்டிட ஆராய்ச்சு அமைப்பின் அனுமதியுடன் செப்டெம்பர் 02ஆம் திகதி வீதியின் நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. நெலுவ – வாருகந்தெனிய முதல் லங்காகம வரையிலான 6.5 கி.மீ முதற் கட்டமாக அபிவிருத்திசெய்யப்பட்டது. அதில் 01கி.மீ கொங்கிரீட் இடப்படவுள்ளது. எஞ்சிய பகுதியான 5.5 கி.மீ நிர்மாணப் பணிகள் நிறைவடைந்துள்ளன. வீதியில் புதிதாக 34 பாலங்கள் மற்றும் சிறு பாலங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வீதி அபிவிருத்தி அதிகார சபை வீதியில் காபட் இடும் பணியை ஆரம்பித்துள்ளதுடன், தற்போது 4கி.மீ நிறைவுசெய்யப்பட்டுள்ளது.
எதிர்பார்க்கப்பட்ட இலக்கான 90 நாட்களுக்குள் வீதியின் வேலைகளை முழுமையாக நிறைவுசெய்வதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் வீதியின் நிர்மாணப் பணிகள் விரைவாக மேற்கொள்ளப்படுவதாகவும் நவம்பர் மாதம் முதல் வாரத்தில் அதனை நிறைவுசெய்ய முடியும் என்றும் இராணுவத்தின் பொறியியல் பிரிவு தெரிவித்துள்ளது.
இரண்டாவது கட்டத்தின் கீழ் லங்காகம – தொம்பகொட முதல் தெனியாய வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அதன்நிர்மாணப் பணிகளும் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வீதியின் மொத்த நீளம் 5.4 கி.மீ ஆகும். 1.8 கி.மீ தற்போது நிறைவுசெய்யப்பட்டுள்ளதுடன், 52 பாலங்கள் மற்றும் சிறு பாலங்களில் 14 பாலங்களின் வேலைகள் நிறைவுசெய்யப்பட்டுள்ளன. வீதி நிர்மாணத்தின் போது சுற்றாடல் நட்புடைய முறைமை பின்பற்றப்படுகின்றது. கற்பாறைகள் வெடி வைத்து உடைக்கப்படுவதில்லை.
முதலாவது மற்றும் இரண்டாவது கட்டங்கள் நிறைவுசெய்யப்பட்டதன் பின்னர் நெலுவையிலிருந்து லங்காகம ஊடாக தெனியாய வரையில் இபோச பஸ் வண்டியொன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் நெலுவையிலிருந்து தெனியாயக்கு செல்வதற்கு செலவான சுமார் 04 மணி நேரம் தற்பேது 45 நிமிடங்களாக குறைவடைந்துள்ளது.
வெள்ள நீரினால் பாதிப்படைந்துள்ள கம்பிப் பாலத்திற்கு பதிலாக கொங்கிரீட் பாலமொன்றை நிர்மாணிப்பதற்கும் ஜனாதிபதி அவர்கள் உறுதியளித்திருந்தார். அப்பணியும் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது.
பிரதேச வாசிகளுக்கு தொடர்பாடல் வசதிகளை வழங்கி இலங்கை டெலிகொம் மற்றும் மொபிடெல் நிறுவனங்கள் இணைந்து சேவை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளன. லங்காகம முன்மாதிரி பாடசாலையில் ஸ்மார்ட் வகுப்பறையொன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கொவிட் நோய்த்தொற்றுக்கு மத்தியில் மாணவர்களுக்கு E- Learning வசதியை இதன் மூலம் வழங்க முடியும்.
சிங்ஹராஜ வனத்தை பாதுகாத்து சுற்றாடல் நட்புடையதாக மேற்கொள்ளப்படும் நெலுவ – லங்காகம வீதி அபிவிருத்தி மற்றும் பல்வேறு கஷ்டங்களுக்கு முகம்கொடுத்துள்ள லங்காகம மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்தமைக்காக பிரதேச மக்கள் ஜனாதிபதி அவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக