ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்த வேளையில், சமிக்ஞையை மீறி நிறுத்தாது சென்ற மோட்டார் சைக்கிளில் மீது இராணுவத்தினர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று அதிகாலை (14) 1.00 மணியளவில் யாழ். பருத்தித்துறை, மந்திகை சந்தியில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் புலோலி தெற்கு, முறாவிலைச் சேர்ந்த பசுபதி அனுஜன் எனும் 22 வயது இளைஞரை துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று (14) இரவு யாழ்ப்பாணம், பருத்தித்துறை, மந்திகை சந்திப்பகுதியில் இராணுவத்தினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில், இரவு 11.00 மணியளவில் அப்பகுதி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை இராணுவத்தினர் நிறுத்தியுள்ளனர்.
ஆயினும் அவ்விருவரும் தங்களிடமிருந்த கற்களை வீசி இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதில் இராணுவத்தை சேர்ந்த ஒருவரின் கையின் மணிக்கட்டு பகுதியில் உடைவுநிலை ஏற்பட்டதை தொடர்ந்து அவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இராணுவத்தினர் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தப்பிச் சென்ற நிலையில் அப்பகுதிக்கு மேலதிக இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு இருந்தனர். இந்நிலையில் நள்ளிரவு கடந்து 1.00 மணியளவில் குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் அப்பகுதியூடாக சென்றுள்ளார். அவரை அப்பகுதியில் இருந்த இராணுவத்தினர் நிறுத்துமாறு சைகை காட்டிய போது, அவர் நிறுத்தாது சென்றுள்ளார். இதனையடுத்து அவர் மீது இராணுவத்தினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த இளைஞர் மோட்டார் சைக்கிளை செலுத்தியவாறு வீட்டுக்கு சென்று, பின்னர் அம்புலன்ஸ் வண்டி மூலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
படுகாயமடைந்த இளைஞனின் குதிகால், கைபகுதிகளில் சூட்டுக் காயங்கள் காணப்படுகின்றன.
துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட இடத்தில் நான்கு வெற்றுத் தோட்டாக்கள் காணப்படுகின்றன.
இச்சம்பவம் தொடர்பில் இராணுவத்தினரும் பொலிசாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான இளைஞனை, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக