மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, வெலிசறை, ராகமை எனும் முகவரியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ரூபா 225 கோடிக்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
புதன்கிழமை (13) நள்ளிரவு அளவில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொண்ட இச்சுற்றிவளைப்பின்போது 225 கிலோ கிராம் (225.969kg) ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளதோடு, சந்தேகநபர்கள் நால்வரை கைது செய்துள்ளனர்.
இதன்போது சந்தேகநபர்கள் பயன்படுத்திய ஆடம்பர கார் ஒன்று மற்றும் கெப் வாகனம் ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 24, 30, 50, 55 வயதுடைய, வெலிசறை மற்றும் ஹோமாகம பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்படும் கோபி தூள் நிறுவனத்தின் பைக்கற்றுகளில் மிகவும் சூட்சுமமாக இந்த ஹெரோயின்களை பொதி செய்துள்ளனர்.
சந்தேகநபர்களை இன்றையதினம் (15) கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக