Breaking

Post Top Ad

Your Ad Spot

வியாழன், 14 மே, 2020

மகத்துவமிக்க காலப்பகுதி

இஸ்லாத்தில் ரமழான் மாதம் சிறப்பையும், மகத்துவத்தையும் பெற்றுக் கொள்வதற்கு காரணமாக அமைந்திருக்கும் காலப்பகுதியை முஸ்லிம்கள் இப்போது அடைந்துள்ளனர். அதுதான் ரமழானின் இறுதிப் பத்து நாட்களாகும். இந்த பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படையான ஒரு இரவில்தான் புனித “லைலத்துல் கத்ர் ” இரவு அமைந்திருக்கின்றது. அந்த இரவில்தான் நன்மை தீமைகளைப் பிரித்தறியக்கூடிய அல்குர்ஆன் அருளப்பட்டது. உலகம் இருக்கும் வரையும் பிறக்கின்ற ஒவ்வொருவருக்கும் நேர்வழியைக் காட்டக்கூடிய இக்குர்ஆன் அருளப்பட்ட இரவு இக்காலப்பகுதியின் ஒரு இரவில் அமைந்திருப்பதால் இந்த முழு மாதத்தையும் அல்லாஹ் சிறப்பித்து மகத்துவப்படுத்தி இருக்கின்றான். 
“லைலத்துல் கத்ர்” இரவானது ஆயிரம் மாதங்களை விடவும் சிறப்புமிக்கதாகும். அதன் காரணத்தினால் இந்த இரவின் சிறப்பையும் மகத்துவத்தையும் அடைந்து கொள்வதில் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் அதிக கவனத்தைச் செலுத்தியிருக்கின்றார்கள். இதன் நிமித்தம் அன்னார் ரமழானின் இறுதிப் பத்து நாட்களிலும் “இஃதிகாப்” இருந்து இறை வணக்கங்களில் ஈடுபடக்கூடியவர்களாக இருந்திருக்கின்றார்கள். குறிப்பாக இரவு நேரங்களில் விழித்திருந்து அதிகமதிகம் இறைவழிபாடுகளில் ஈடுபட்டார்கள். இரவில் உறங்கிக் கொண்டிருப்பவர்களையும் எழுப்பிவிடக் கூடியவர்களாகவும் இருந்த அன்னார், முழு ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் இறைவணக்கங்களில் ஈடுபட்டு வந்துள்ளார்கள்.
அந்த வகையில் ஒரு வருடம் புனித ரமழான் மாதம் வந்த போது உரை நிகழ்த்திய நபி (ஸல்) அவர்கள், “மக்களே...! உங்களிடம் ஒரு மாதம் வந்துள்ளது. இம்மாதத்தில் ஒரு இரவு இருக்கின்றது. அது ஆயிரம் மாதங்களை விடவும் சிறப்பானது. எவன் அந்த இரவின் பாக்கியங்களை இழந்து விடுகின்றானோ, அவன் நன்மைகள் அனைத்தையும் இழந்தவனாவான்.  இந்த இரவின் நன்மைகளையும், பாக்கியங்களையும் இழந்தவனே உண்மையில் அனைத்தையும் இழந்தவனாவான்” எனக் கூறினார்கள். (ஆதாரம் - இப்னு மாஜா)
ஆகவே, ரமழானின் இறுதிப் பத்து நாட்களினதும் பெறுமதியையும், சிறப்பையும் உணர்ந்து செயற்படுவோம். அதன் மூலம் அல்லாஹ்வின் உயரிய பிரதிபலன்களை அடைந்து கொள்ளலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Post Top Ad

Your Ad Spot