நேற்று (05) இரவு ஐக்கிய அரபு இராச்சியம், ஷார்ஜாவின் அல் நஹ்தாவில் உள்ள ஒரு குடியிருப்பு கோபுரத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் அக்கட்டடம் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதில் ஒன்பது பேருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டு அந்த இடத்தில் சிகிச்சை பெற்று வருவதாக ஷார்ஜா சிவில் பாதுகாப்பு பணிப்பாளர் கேர்னல் சாமி காமிஸ் அல் நக்பி தெரிவித்துள்ளார்.
அந்நாட்டு நேரப்படி இரவு 9.04 மணியளவில் அப்கோ கோபுரத்தின் (Abbco Tower) 10 ஆவது மாடியில் தீ விபத்து ஏற்பட்டது.
ஷார்ஜா சிவில் பாதுகாப்பு குழுக்களின் விரைவாக செயற்பட்டு ஒரு பெரிய பேரழிவைத் தவிர்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தீ பரவலுக்கான காரணம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
தீ பரவல் தொடர்பில் பொலிஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு வந்ததைத் தொடர்ந்து, மினா மற்றும் அல் நஹ்தா தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த சிவில் பாதுகாப்புப் பணியாளர்கள், தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
2006 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த கோபுரத்தில் வாகனத் தரிப்பிடம் உட்பட 45 தளங்கள் உள்ளதோடு, அவற்றில் 36 குடியிருப்பு தளங்கள் உள்ளன. ஒவ்வொரு தளத்திலும் 12 குடியிருப்புகள் உள்ளன.
உள்ளே யாராவது சிக்கியிருக்கிறார்களா என்று சோதிக்க பொலிசார் ட்ரோன்களைப் பயன்படுத்துவதாக ஷார்ஜா பொலிஸ் மத்திய நடவடிக்கைகளின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் கேர்ணல் டாக்டர் அலி அபு அல் சஊத் தெரிவித்துள்ளார்.
கட்டட உரிமையாளரைத் தொடர்பு கொண்டதாக தெரிவித்த அவர், அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மாற்று தங்குமிடம் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக