கொவிட்-19 நிதியத்திற்கு என தெரிவித்து, பிடித்தம் செய்த, தமது ஏப்ரல் மாத சம்பளத்தின் ஒரு நாள் சம்பளத்தை மீள வழங்குமாறு, இலங்கை தபால் சேவை ஊழியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில், தபால் அமைச்சின் செயலாளருக்கு கடிதமொன்றை எழுதியுள்ள அச்சங்கத்தின் செயலாளர் டி.எம். விஜேரத்ன இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கொவிட்-19 தொற்றுநோய் இலங்கையில் பரவி வரும் நிலையில், இக்கொடிய தொற்றுநோயிலிருந்து தப்பிக்க மக்கள் அனைவரும் முயற்சி செய்கிறார்கள். இந்த வைரஸ் இலங்கைக்கு வருவதற்கு முன்பு, அது வருமான வழிகள், பயணங்கள் மேற்கொள்வது சமூக தொடர்புகள் ஆகியவற்றை முற்றிலும் மாற்றியமைத்துள்ளது. தபால் ஊழியர்களும் இதில் விதிவிலக்கல்ல.
சமூகத்திலுள்ள ஏனையவர்களைப் போன்று, தபால் ஊழியர்களுக்கும் வருமான வழிகள் இல்லாமலானது. வருமானத்தை இழந்து, பொருட் கொள்வனவு உட்பட சமூக வாழ்க்கையை இழந்த அந்த ஊழியர்களுக்கு, அத்தியாவசிய சேவைகளையும் வழங்க வேண்டியிருந்தது. அவ்வாறான ஊழியர்களின், ஏப்ரல் மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை கொவிட் நிதியம் எனக் கூறி பிடித்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்த பணத்தை இவ்வாறு வழங்க தபால் ஊழியர்கள் தங்களது விருப்பத்தை தெரிவிக்கவில்லை.
இது பொதுவான, அரசாங்கத்தின் முடிவு (சுற்றறிக்கை / வர்த்தமானி) இற்கு அமைவான ஊதியக் குறைப்பு அல்ல.
தபால் மாஅதிபரால் தன்னிச்சையாக பிடித்தம் செய்யப்பட்ட ஊழியர்களின் ஒரு நாள் ஊதியத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக